“மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப் பகிர்விலேயே எமக்கு உடன்பாடு உண்டு” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு – கிழக்கில் தோல்வி உறுதியெனத் தெரிந்தும் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கத் தேர்தலை நடத்தினார்.
2017ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை ஊடாக மாகாண சபைத் தேர்தலைக் காலவரையறையின்றிப் பிற்போட மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் ஒத்துழைப்பு வழங்கின.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின்படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது நாட்டில் வீண் பிரச்சினைகளையே ஏற்படுத்தும். எனவே, இவ்விரு அதிகாரங்களைத் தவிர்த்து ஏனையவற்றைச் சகல மாகாணங்களுக்கும் பகிர்வதில் எமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை.
தேர்தல் முறைமை குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழு, நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலத்துக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை.” – என்றார்.
மாகாண சபைத் தேர்தலின் ஊடாக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் இறுதி நிலைப்பாடு என்றும் சாகர காரியவசம் இதன்போது மேலும் தெரிவித்தார்.
