வளம் நிறைந்த நுவரெலியா மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய சிறப்பான வேலைத்திட்டங்கள் தேவையென அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
நோர்வூட் நகரில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
” ஆங்கிலேயர் முழு ஆசியாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது ஆங்கிலேயர்கள் கோல்ப் விளையாட்டு மைதானத்தினையும் குதிரைப்பந்தய திடலையும் நுவரெலியாவிலேயே அமைத்தனர். ஆனால் அண்மையில் நடைபெற்ற குதிரைப்பந்தய போட்டிக்கு இந்தியாவில் இருந்தே குதிரைப்பந்தய வீரர்கள் கொண்டுவரப்பட்டனர். ஒரு குதிரைக்கு 50 இலட்சம் கொடுக்கப்பட்டன.
மூன்று பந்தயத்துக்கு 150 இலட்சம் ரூபாவினை ஒரு குதிரைக்கு மாத்திரம் செலவுசெய்தனர். இவ்வாறான விளையாட்டுக்களை இங்கே அபிவிருத்தி செய்திருந்தால் எமது நாட்டில் இருந்து வெளியில் செல்லும் பணமும் மிஞ்சியிருக்கும். வெளிநாட்டு பணமும் வந்து குவிந்திருக்கும். இன்று உலகில் கோல்ப் விளையாட்டு மைதானங்கள் உள்ள நாடுகளும் அந்த பிரதேசங்களும் பாரிய அளவில் அபிவிருத்தி கண்டு வருகின்றன.
ஆனால் எமது நுவரெலியாவில் உள்ள கொல்ப் விளையாட்டு மைதானம் சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக மாற்றவேண்டும். அவ்வாறு மாற்றினால் உலகில் உள்ள நாடுகள் இந்த விளையாட்டு மைதானத்தினை பயன்படுத்துவதன் மூலம் பாரிய அளவில் அபிவிருத்தி காணமுடியும்.
அதேபோன்று நுவரெலியாவில் தான் சிறந்த பூக்கள் மலர்கின்றன.ஆனால் உலக தேவையில் 3 சதவீதமே நாங்கள் பூ உற்பத்தி செய்கின்றோம்.
அதே போன்று தான் மரக்கறி, விவசாயம் போன்ற துறைகளும் நுவரெலியா மாவட்டத்தில் மேற்கொள்கின்றனர்.
ஆகவே சூரிய ஒளியினையும் காற்றினையும் பயன்படுத்தி மரக்கறிகள், மலர்கள் கெடாதவாறு பாதுகாக்கக்கூடிய குளிர்சாதன அறைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ வெற்றிபெற்ற போதிலும் நுவரெலியா மாவட்டத்தில் தோல்வியடைய வேண்டியேற்பட்டது அதற்கு பிரதான காரணம் இங்குள்ள மக்கள் புரிந்துகொள்ளாமையினையே.
இந்த மாவட்டத்தினை அபிவிருத்தி செய்து முழுநாட்டுக்கும் பயனுள்ள மாவட்டமாக அமையவேண்டும் என்றால் சிறந்த திட்டங்களும் செயல்களுமே அவசியமாகின்றன என அவர் தெரிவித்தார்.
நன்றி – தினகரன்