ஸ்பெயின்- மொராக்கோ எல்லை கடப்பு: உயிரிழப்பு 67 ஆக உயர்வு- பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

மொராக்கோவுடனான ஸ்பெயினின் செவுட்டா (Ceuta) எல்லைக் கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயின் அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. நீரில் மூழ்கியும், கடலலைத் தடுப்புச் சுவரைக் கடக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் சிலர் உயிரிழந்துள்ளனர்.

வியாழன் மற்றும் வெள்ளிக்கு இடையே சுமார் 60,000 புலம்பெயர்ந்தோர் ஸ்பெயினின் சிறிய யூனியன் பிரதேச எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து, கடலுக்குள் இருக்கும் அலைதடுப்பு வேலியை ஒட்டி 500 மீட்டர் நீளமுள்ள கட்டுப்பாட்டுத் தடுப்பை அமைப்பதாக ஸ்பெயின் அறிவித்தது.

சனிக்கிழமை காலை செவுட்டாவின் தராஜால் (Tarajal) கடற்கரைக்கு நீந்தி வந்த களைப்படைந்திருந்த சில புலம்பெயர்ந்தோரை ராணுவத்தினர் சந்தித்து, எல்லைக்கு அப்பால் திரும்ப அழைத்துச் சென்றனர். வட ஆபிரிக்காவில் உள்ள ஸ்பெயின் பகுதிக்குள் நுழைந்தவர்களில் பெரும்பான்மையானோர் ஏற்கனவே மொராக்கோவிற்குத் திரும்பிவிட்டதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் சிறந்த வாழ்வாதாரத்தை நம்பி வந்த மக்களால் வீதிகள் நிறைந்தும், குழப்பங்கள் நீடித்தும் வந்த சில நாட்களுக்குப் பிறகு, செவுட்டா வாசிகள் சனிக்கிழமை ஒரு அமைதியற்ற சூழலில் இருந்தனர்.

84,000 மக்கள் தொகை கொண்ட இந்த தன்னாட்சி நகரவாசிகளின் பாதுகாப்பு இன்னும் கவலையளிப்பதாகவே உள்ளது.

“எல்லைச் சம்பவத்தின் காரணமாக இந்த நகரத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது,” என்று செவுட்டாவின் தலைவர் ஹவான் ஹெசுஸ் விவாஸ் (Juan Jesus Vivas) கூறினார்.

“மக்களைத் திரும்ப அனுப்பும் பணி திருப்திகரமாகத் தொடங்கியுள்ளது, ஆனால் இந்த செயல்முறை முழுமையடைய வேண்டும்,” என்று அவர் கூறினார். “நகரம் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், மொரோக்கோ திரும்ப முடியாது என்ற உறுதியுடன் இருக்கும் சில புலம்பெயர்ந்தோர் செவுட்டாவிலேயே தங்கியுள்ளனர்.

“நாங்கள் எங்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்பதற்காகவே, நாங்கள் உணவு எதுவும் வாங்க முடியாதபடி அனைத்தையும் மூடிவிட்டார்கள்,” என்று புலம்பெயர்ந்தவர்களில் ஒருவரான 23 வயதான மொராக்கோவைச் சேர்ந்த முகமது ஹத்ரி (Mohamed Hatri) என்பவர் தெரிவித்தார்.

“அவர்கள் மூடினாலும், நாங்கள் பசியோடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இங்கேயே தங்குவதில் உறுதியாக இருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

Related Articles

Latest Articles