ஹொங்கொங்கில் நடைபெற்ற 2026 ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான (U20) தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 02 தங்கம், 02 வெள்ளி மற்றும் 04 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 08 பதக்கங்களை வென்று, பல பலம் வாய்ந்த ஆசிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி பதக்கப் பட்டியலில் 08வது இடத்தைப் பிடித்து தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்த இலங்கை இளம் தடகள வீரர்கள் இன்று (02) அதிகாலை 06:10 மணிக்கு UL 885 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
வெற்றிபெற்ற வீரர்களை வரவேற்பதற்காக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர். இதன்போது அமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் திரு. தர்ஷன வராகொட, அபிவிருத்திப் பணிப்பாளர் திரு. எம்.ஏ.பி. திலும் தயாரத்ன மற்றும் உதவி விளையாட்டுப் பணிப்பாளர் திரு. டபிள்யூ.ஜி.எம். துஷார உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை தடகள சங்கத்தின் தலைவர் திரு. பிமல் விஜேசிங்க அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், வெற்றிபெற்ற வீரர்களின் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்கள் விமான நிலைய வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இலங்கைக்காக பதக்கங்களை வென்றவர்கள்:
தங்கப் பதக்கங்கள்: தருஷி அபிஷேகா (பெண்களுக்கான 1500 மீ – 04:31.41 நிமிடங்கள்), ரன்சினி பெரேரா (பெண்களுக்கான 200 மீ – 24.07 வினாடிகள்)
வெள்ளிப் பதக்கங்கள்: தருஷ மெண்டிஸ் (ஆண்களுக்கான உயர பாய்தல் – 2.14 மீ), நெத்சர தினேத் (ஆண்களுக்கான 800 மீ – 01:49.22 நிமிடங்கள்)
வெண்கலப் பதக்கங்கள்: சதெவ் ராஜகருணா (ஆண்களுக்கான 200 மீ – 21.13 வினாடிகள்), மிஹின்சா அபேரத்ன (பெண்களுக்கான உயர பாய்தல் – 1.72 மீ), தருஷி அபிஷேகா (பெண்களுக்கான 800 மீ – 02:07.97 நிமிடங்கள்) மற்றும் 4×400 மீ கலப்பு தொடரோட்டக் குழு.
இந்த இளம் வீரர்களின் சாதனைகள், இலங்கை தடகள விளையாட்டின் எதிர்காலத்தை சர்வதேச மட்டத்தில் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கான ஒரு சிறந்த ஆரம்பமாகும். தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்த அனைத்து இளம் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் மற்றும் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் பெற்றோர்களுக்கும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஊடக அறிக்கையிடலுக்கு நீங்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி. இச்செய்தியை உங்களது ஊடகங்கள் வாயிலாக பிரசுரிக்குமாறு/ஒளிபரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.










