டி20 உலகக் கிண்ணத்தின் மதிப்பு மிக்க அணியில் இலங்கையின் ஒரு வீரரும் இடம்பெறவில்லை என்பதோடு சம்பியன் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்தில் இருந்து நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
போட்டி வர்ணனையாளர்கள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு ஒன்றினாலேயே இந்தக் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத்தில் சோபித்த வீரர்களை உள்ளடக்கியதாக பதினொரு வீரர்கள் கொண்ட அணி இதன்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணித் தலைவரும் விக்கெட் காப்பாளருமான ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், சாம் கரன், மார்க் வூட் ஆகிய இங்கிலாந்து வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த சதாப் கான் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகிய இரு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற இந்தியாவின் விராட் கொஹ்லி மற்றும் சூர்யகுமார் யாதவும் இந்தியாவில் இருந்து சேர்க்கப்பட்டிருப்பதோடு, இந்த அணியின் 12ஆவது வீரராக இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரர் ஹார்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். தவிர நியூசிலாந்தின் கிளன் பிலிப்ஸ், சிம்பாப்வேயின் சிகந்தர் ராசா, தென்னாபிரிக்காவின் அன்ரிஜ் நோர்ஜே ஆகியோரும் இந்தக் கனவு அணியில் இடம்பெற்றுள்ளனர்.










