2021 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கிண்ண தொடரை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
7ஆவது 20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் இந்த போட்டி வேறுவழியின்றி ஒத்திவைக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. ஆனால் 2021ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பம் இல்லை.
ஏனெனில், 2022ஆம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தினால், அதற்கு அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வது மிகவும் சிரமமாக இருக்கும் என்று இந்திய தரப்பில் சொல்லப்பட்டது.
இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 20 ஓவர் உலக கோப்பை போட்டி விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
இதன் முடிவில் 2021ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை (அக்டோபர்-நவம்பர்) திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்துவது என்றும், தள்ளிவைக்கப்பட்ட 20 ஓவர் உலக கோப்பை போட்டியை 2022-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
12ஆவது பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் மார்ச் 7 ஆம் திகதிவரை நியூசிலாந்தில் நடக்க இருந்தது.
கொரோனா அபாயத்தால் இதற்கான தகுதி சுற்று முழுமை பெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த உலக கோப்பை போட்டியையும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரிவரை ஒத்திவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தகவல்கள் ஐ.சி.சி. வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.