“தேசிய மக்கள் சக்தி அரசு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பழிவாங்குகின்றது. குறிப்பாக மகா சங்கத்தினரை இலக்கு வைத்து திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.
விசேட அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“அரசமைப்பின் படி பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளித்து அதைப் பாதுகாத்து போஷிப்பது அரசின் கடமையாகும்.
அதேபோல் ஏனைய மதங்களையும் கலாசாரங்களையும் மதிக்க வேண்டும். ஆனால், அரசு நாட்டை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்ற முயற்சிக்கின்றது.
மதகுருமார்களைப் பழிவாங்குவதை உடனடியாக நிறுத்தி, அனைத்து மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவத்தை வழங்க வேண்டும்.
விவசாயிகள் அறுவடை செய்துள்ள போதிலும், அவற்றுக்கு நியாயமான விலையை வழங்கவோ அல்லது அவற்றை முறையாகக் கொள்வனவு செய்யவோ அரசு தவறிவிட்டது.
நெல் களஞ்சியசாலைகள் பூட்டப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மேலும், விவசாயம் முடிவடைந்தும் இன்னும் உர மானியம் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.
காலி – பூஸா இராணுவ முகாமிலுள்ள 180 மாற்றுத்திறனாளி இராணுவத்தினரை எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் பனாகொட பகுதிக்கு மாற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இது அவர்களை அவமதிக்கும் செயல்.
சீனா இலவசமாக வழங்கிய பாடசாலை சீருடைகளைக் கூட மாணவர்களுக்கு முறையாக விநியோகிக்க இந்த அரசுக்கு இயலவில்லை.” – என்றுள்ளது.
