அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளார்கள். அதேபோல், ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மலையக பெருந்தோட்ட மக்களும் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகி வருகின்றார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியவற்றின் வளர்ச்சியை முன்னிறுத்தி புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (24) கொட்டகலை “கண்ணதாசன் கலாசார மண்டபத்தில்” இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ஜி. நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். திகாம்பரம் எம்.பி. நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து மேலும் பேசுகையில்,
” அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மலையக மகளுக்கு சம்பள உயர்வு வழங்கியதை வரவேற்று பட்டாசு கொளுத்தி பாற்சோறு வழங்கியும், பாலாபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் அந்த சம்பள உயர்வைப் பெற்றும் மிகுந்த கஷ்டத்தையே அனுபவிக்க வேண்டியுள்ளது.
அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதைப் போன்று மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. வீடுகளைக் கட்டிக் கொள்ள காணித் துண்டுகளை வழங்கினால் எதிர்காலத்தில் சொந்த முயற்சியில் அவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொள்வார்கள். அரசாங்கத்தின் “அட்டன் பிரகடனம்” என்னவாயிற்று என்றே தெரியவில்லை.
இந்நிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள எமது அங்கத்தவர்கள் யாருடைய ஆசை வார்த்தைகளுக்கும் மயங்கி விடாமல் என்றும் எம்முடனேயே இருக்கிறார்கள். எனவே, இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தொழிற்சங்கத்தையும், அரசியல் கட்சியையும் பலப்படுத்தும் வகையில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தமது பிரதேசங்களில் சுதந்திரமாகவும், ஜனநாயக ரீதியாகவும் பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுவரை தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியவர்கள் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் சேவையைத் தொடர்ந்து அவர்களின் அபிமானத்தைப் பெற்று கொண்டு அடுத்து வரும் அரசியல் வாய்ப்புகளுக்கும் தயாராக இருந்து கொள்ள வேண்டும்.
எமது அமைப்பின் இளைஞர் மாநாடு 2027 பெப்ரவரி மாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அத்தோடு, மார்ச் மாதம் 8 ஆந் திகதி சர்வதேச மகளிர் தினத்தை மலையகத்தில் எழுச்சி மிக்க நிகழ்வாக நடத்தி மலையகப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ற வகையில் தோட்டங்கள் தோறும், வட்டாரங்கள் தோறும் தெளிவூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இளைஞரர் அணி, மகளிர் அணி ஆகியவற்றை வலுப்படுத்த பிரதேச வாரியாக அமைப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தொழிற்சங்கப் பாரம்பரியம் மிக்க எமது சங்கத்தின் எதிர்காலச் செய்பாடுகள் இளைஞர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.










