TID யில் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபருக்கு அறிவித்தல்!

வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் நாளை (19) காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஓய்வுபெறும் சந்தர்ப்பத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவிடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தில் சட்டமா அதிபராக பதவி வகித்தவர் என்ற வகையிலும், தாக்குதல் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்கள் காணப்பட்டமையாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தப்புல டி லிவேரா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மதிப்பவர் என்ற அடிப்படையில் தமக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles