“அதிகார மமதையில் தலைகால் புரியாமல் ஆடுகிறது அரசாங்கம்”

நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின் அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசு முற்றிலும் அதிகாரப் போதையில் மூழ்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச  குற்றம் சாட்டினார்.

கொழும்பு புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பின்னர், நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“தரைமட்டத்தின் உண்மையான ஆழம் புரியாமல் உயரத்தில் பறக்கும் இந்த அரசு, பாய்ந்து பார்க்கும்போதுதான் எவ்வளவு பெரிய பள்ளத்தில் வீழ்ந்திருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ளும். அவ்வாறு விழுந்து அடிபட்டு நாசமடைவதற்கே அரசு முற்படுகின்றது.

நாட்டின் நீதித்துறை மீது தமக்கு இன்னமும் முழுமையான நம்பிக்கை உள்ள போதிலும், தற்போதைய பொலிஸ் கட்டமைப்பு முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டு ‘ஜே.வி.பி பொலிஸாக’ அல்லது ‘பெலவத்தை பொலிஸாக’ச் செயற்படுவதால் பொலிஸார் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை.” – என்றார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் திட்டம் குறித்துச் சுட்டிக்காட்டிய அவர்,

“ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்து அரசமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது வரலாற்றுப் பிழையாகும்.

நாட்டில் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடி, அசாத்தியமான வரிச்சுமை மற்றும் விலை உயர்வால் திண்டாடி வருகின்றனர். விவசாயிகள் மற்றும் மீனவர்களும் கடுமையான வாழ்வாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அரசு தங்களின் உத்தேச அரசமைப்புத் திருத்தங்கள் மற்றும் அதிகார மமதையில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது.” – என்றார்.

 

Related Articles

Latest Articles