இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட ‘அமைதி வாரியம் என்ற புதிய அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முறைப்படி தொடங்கி வைத்தார்.
டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் இது தொடர்பான அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டார்.
“ மேற்படி அமைப்பில் இணைய அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். வருங்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கே இது சவாலாக விளங்கும்.
இருப்பினும், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகள் பல இந்த அமைப்பில் சேர மறுப்புத் தெரிவித்துள்ளன.
காசா முனையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அமெரிக்காவுக்கானது மட்டுமல்ல, உலகுக்கானது.
காசாவில் வெற்றி பெற்ற பிறகு, மற்ற உலகப் பிரச்சினைகளுக்கும் இந்த அமைப்பை விரிவாக்கம் செய்வோம்.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அசர்பைஜான் முதல் பராகுவே வரை சுமார் 59 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்த டிரம்ப், அங்கு கூடியிருந்த தலைவர்களை நோக்கி, “நீங்கள் உலகிலேயே அதிகாரம் மிக்கவர்கள்; எனது நண்பர்கள்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இந்த அமைதி வாரியத்தில் இணைய மறுத்துவிட்டன.
ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பில் சேருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
அமைதி வாரிய தொடக்க நிகழ்வில் அமெரிக்க வெளிஉறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர், சவுதி அரேபியா, அர்ஜென்டினா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
