அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக, அவரது தூதுவரும், மருமகனுமான ஜாரெட் குஷ்னர், எகிப்தின் கெய்ரோவில் ஹமாஸ் அமைப்பின் தலைவரைச் சந்தித்த மறுநாளே, ஜெருசலேமில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் திட்டத்தின்படி, காசாவில் பயங்கரவாதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு, புதிய பாலஸ்தீன பொலிஸ் படையுடன் இணைந்து ‘சர்வதேச அமைதிப் படை’ (International Stabilization Force) பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ப, இஸ்ரேலிய படைகள் கட்டம்பட விலக்கிக்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட்ட பிறகே இஸ்ரேலிய ராணுவம் வெளியேறும் என்பதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.
மேலும், எதிர்வரும் ஒக்டோபர் 27-ஆம் திகதி நடைபெறவுள்ள இஸ்ரேலிய பொதுத்தேர்தலுக்கு முன்னர் நெதன்யாகு இதில் எந்தவொரு பெரிய விட்டுக்கொடுப்புகளையும் செய்ய வாய்ப்பில்லை எனத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெதன்யாகுவுடனான இந்த அவசரச் சந்திப்பில் குஷ்னருடன், ட்ரம்பின் ‘அமைதி வாரிய’ (Board of Peace) காசாவுக்கான தூதர் நிக்கோலே மிலாடெனோவும் (Nickolay Mladenov) பங்கேற்றார்.
ஹமாஸ் தலைவருடன் அரிய சந்திப்பு
கெய்ரோவில் எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி மத்தியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யா (Khalil Al-Hayya) கலந்து கொண்ட நிலையில், அவரை குஷ்னர் சந்தித்துப் பேசியுள்ளார்.
அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸின் பிரதிநிதிகளுடன் குஷ்னர் நடத்தும் இரண்டாவது நேரடிச் சந்திப்பு இதுவாகும்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், ட்ரம்பின் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா தயாரித்த புதிய 15 அம்ச வீதிவரைபடத்திற்கு (Roadmap) ஹமாஸ் ஒப்புதல் அளித்தது. ஆனால், இஸ்ரேல் அதனை நிராகரித்துள்ளது.
காசாவிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுதல் மற்றும் தாக்குதல்களை நிறுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை இஸ்ரேல் முதலில் நிறைவேற்றினால் மட்டுமே ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் என ஹமாஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.










