மீகொட பகுதியில் இடம்பெற்ற வெசாக் தானசாலைக்கு அருகில் கூடிருந்த மக்கள் கூட்டத்திற்குள் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த விபத்தில், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதி பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். அத்துடன் சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் சிறுவன் ஒருவன் உட்பட மேலும் ஏழு பேர் காயமடைந்து சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம, மீகொட பகுதியில் வீதியில் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை (31) வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வெசாக் தானசாலை ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35, 38 மற்றும் 58 வயதுடைய மூன்று ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
