தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமாகிய பின்னரே மலையகத் தமிழர்களுக்கு உரிமை அரசியலையும் முழுமையாக அனுபவிக்ககூடிய சூழ்நிலை உதயமாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” எமது மக்களுக்கு குடியுரிமை கிடைத்தகையோடு போராடியேனும் நிலவுரிமை, வீட்டுரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை, சம்பள உரிமை உட்பட மேலும் பல உரிமைகளை பெற்றிருக்கவேண்டும். ஆனால் அதற்கான தலைமைத்துவத்தை எந்த அரசாங்கம் வந்தாலும் அமைச்சுப் பதவிகளில் இருப்பவர்கள் வழங்கினார்களா? இல்லை.
குடியுரிமை கிடைத்துவிட்டது, அதை வாங்கிக்கொடுத்தது நாம்தான் எனக்கூவி கூவியே வாக்குவேட்டை நடத்தினர். அதுமட்டுமல்ல மலையகத் தமிழர்களை வாக்களிப்பு இயந்திரமாக பயன்படுத்தும் ஆட்சியாளர்களின் முயற்சிக்கும் துணைபோனார்கள்.
குடியுரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் மலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கியவர்கள் தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால் பல்வேறு உரிமைகளை முன்பே பெற்றிருக்கலாம். ஆனால், அமைச்சுப் பதவிகள் மட்டுமே அவர்களின் குறியாக இருந்தது.
தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமாகிய பின்னரே மலையகத் தமிழர்களுக்கு உரிமை அரசியலையும் முழுமையாக அனுபவிக்ககூடிய சூழ்நிலை உதயமாகியுள்ளது. நிலவுரிமை, வீட்டுரிமை ஆகியவற்றை பெற்றுக்கொடுத்துள்ளோம்
அத்துடன், அரசாங்க நிதியை தோட்டப்பகுதி அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு தடையாக இருந்த பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டோம்.
மலையகத்துக்கென தனியானதொரு அதிகார சபையையும் உருவாக்கியுள்ளோம். கண்டி மாவட்டத்திலும் தமிழர்களுக்காக உரிமை அரசியலும், அபிவிருத்தி அரசியலும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டது. இப்படி எமது சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ” – என்றார்.