தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய கலந்துரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க மற்றும் பதில் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்கிரமரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிட்டுள்ளபடி முறையாக தேர்தலை நடத்துவதற்கு, கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையம், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது :
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் வாக்களிப்பதற்காக முப்படையினரின் உதவியைப் பெற்றுக் கொள்வது பற்றியும் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படுகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக வைரஸ் பரவல் தீவிரமடைந்தால் முன்னெடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றியும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.