நீர்கொழும்பு சிறைக்குள் நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீர்கொழும்பு நீதவான் ஷாலனி பெரேரா முன்னிலையில் நேற்று சமர்ப்பித்தது.

இந்த வன்முறை குறித்து விசாரிக்க 40 சிஐடி அதிகாரிகள் அடங்கிய 3 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் போது வன்முறை வெடித்ததற்கான பின்னணி மற்றும் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

கடந்த ஜூலை 5 ஆம் திகதி, சிறைச்சாலையின் A1 வார்டில் அடைக்கப்பட்டிருந்த ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ (Katuwellegama Suresh) என்ற கைதி, தனக்கு வழக்கமாக வழங்கப்படும் 30 நிமிட உடற்பயிற்சி நேரத்தை விட கூடுதல் நேரம் கேட்டுள்ளார். சிறை அதிகாரி அதற்கு மறுத்ததால், அவரை சுரேஷ் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார்.

மறுநாள் (ஜூலை 6) வார்ட் திறக்கப்பட்டதும், வெளியே ஓடிவந்த சுரேஷ், A2 வார்டில் இருந்த கைதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தனிப்பட்ட மோதலே சிறைச்சாலை முழுவதும் பரவி பெரும் கலவரமாக மாறியுள்ளது என CID தெரிவித்தது.

ஜூலை 6 காலை உணவு வழங்க அதிகாரிகள் சென்றபோது மீண்டும் வன்முறை வெடித்தது. கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறை அவசரக்கால அதிரடிப் படையினர் மீது கைதிகள் கல், இரும்புத் தடிகள் மற்றும் மரக்கட்டைகளால் தாக்குதல் நடத்தினர்.

நீர்கொழும்பு சிறை அதிகாரிகள் பாதைகளை அறிந்து தப்பித்த போதிலும், கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் வழியறியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

கலவரத்தின் போது சிறையின் ஒரு பகுதி ஆயுதக் கிடங்கு கைதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. கைதிகள் சிறை அதிகாரிகள் மீதே துப்பாக்கியை நீட்டி மிரட்டியுள்ளனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், விசேட அதிரடிப்படையினர் (STF) முதலில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அது பலனளிக்காததால் வான்நோக்கிச் சுட்டனர். பின்னர், சிறை வாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி, உள்ளே படுகாயமடைந்து கிடந்த அதிகாரிகளை மீட்டனர்.

சிறைக்குள் இருந்து ஒரு F-58 ரக துப்பாக்கி, ஒரு மேகசின் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் (spent cartridges) மீட்கப்பட்டுள்ளன. மேலும், சோதனைகளுக்காக சிறை அதிகாரிகளின் 60 துப்பாக்கிகள் CID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலையின் CCTV பதிவுகள் அடங்கிய DVR-கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக ஆய்விற்காக மொரட்டுவ பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளன.

இதுவரை 136 சிறை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 STF அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. கலவரத்தின் போது 2,417 கைதிகளும் 166 ஊழியர்களும் சிறைக்குள் இருந்துள்ளனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதவான் ஷாலனி பெரேரா, வன்முறையின் போது சிறைக்குள் இருந்த அனைத்துக் கைதிகள் பற்றிய விபர அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார். அத்துடன், நீர்கொழும்பிலிருந்து மற்றைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுமாறு CID-க்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

Related Articles

Latest Articles