மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கைது நடவடிக்கை நேற்று (ஜூலை 14) மதியம் மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதியில் அமைந்துள்ள, பிரவுன்லோ பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றையவர் டிக்கோயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 3,290 மில்லிகிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளும், 360 மில்லிகிராம் ‘ஹேஸ்’ (Hash) போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமார தெரிவித்தார்.
இப்பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலுக்கு அமைவாக, மஸ்கெலியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே இவ்விரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரையும் இன்றைய தினம் (ஜூலை 15) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
– மஸ்கெலியா நிருபர் – ]
