மலையகத் தமிழ் சமூகம் தடையின்றி தங்கள் சொந்த வீடுகளில் வசிக்கும் வகையில் காணி உரிமையைப் பெற்றுக்காடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது அளித்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னரும் நிறைவேற்றவில்லை என்பதை மலையகத் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது அட்டன் பிரகடனத்தின் மூலம் மலையக மக்களுக்கு அவர்களின் நில உரிமைத் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என, கொட்டகலை, சித்திவிநாயகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மலையக வாழ்வுரிமை மாநாட்டில் உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
“அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது வந்து வெளியிட்ட அட்டன் பிரகடனம். மலையகத்தில் பயிரிடப்படாத காணியெல்லாம் மலையக இளைஞர்களுக்கு பிரித்து வழங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர். எங்கேயாவது காணி கொடுத்தார்களா? சொன்னார்கள் கொடுக்கவில்லை.”
ஒக்டோபர் 15, 2023 அன்று, தேசிய மக்கள் சக்தி, ‘தாயகத்திற்கு வலிமை, மலையகம் 200, கௌரவமான குடிமக்கள்’ என்ற தலைப்பில் அட்டன் பிரகடனத்தை, அட்டனிலுள்ள DKW மண்டபத்தில் வெளியிட்டபோது, ஆவணத்தின் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் அந்தக் கூட்டணியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கையெழுத்திட்டிருந்தது.
“பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று வீடமைப்பு ஆகும். 2012/2013 தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையின்படி அவர்களில் 67.8வீதமானவர்கள் இன்னமும் ‘லயன் அறைகளில்’ வாழ்கிறார்கள். மேலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிமலையகத் தமிழ் மக்கள் சுபீட்சமான சமுதாயமென்ற வகையில் அவர்களின் அபிவிருத்திக்கு உதவுகின்றவீடமைப்புத் திட்டமொன்று மூலமாக அவர்களுக்கு உயிர்வாழ்வதற்கான பொருத்தமான வீடுகளை வழங்குகின்ற வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கும்.” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மலையக மக்களின் காணி உரிமைகளை உறுதி செய்வதோடு மாத்திரமல்லாமல், மலையக தமிழ் சமூகத்தில் வேலையற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாத பகுதிகள் மற்றும் கைவிடப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி அட்டன் பிரகடனத்தின் மூலம் உறுதியளித்திருந்தது.
“சில தோட்டங்களில் தொழிலாளர்கள் ஓய்வுபெறும்போது அவர்களை வீடுகளில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்கும். பெரும்பாலான தோட்டக்குடும்பங்கள் பணத்தையும் உழைப்பையும் செலவிட்டு தமது வீடுகளை அமைத்திருந்தபோதிலும் காணிகளைப் பதிவுசெய்கின்ற அங்கீகரிக்கப்பட்ட உறுதிகள் இன்னமும்
கிடையாது.
உறுதிகள் இல்லாத பிரச்சினை இந்த சமுதாயத்திற்கு மாத்திரமன்றி நாட்டின் ஏனைய
பிரதேசங்களைச் சேரந்த குடியிருப்புவாசிகளும் எதிர்நோக்குகின்ற பிரச்சினையாக அமைவதோடு இந்தசிக்கலுக்கு நியாயமான தீர்வினைக் கண்டறிகின்ற அத்துடன் மலையகத் தமிழ் மக்களுக்கு அவர்களினவீடுகளில் தடைகளின்றி தொடர்ச்சியாக வசிப்பதற்கான உரிமையை தேசிய மக்கள் சக்தி உறுதிசெய்கின்றது.
பெருந்தோட்டப் பிரதேசங்களில் பயிர்செய்யப்படாத பிரதேசங்கள் மற்றும் கைவிடப்பட்ட
காணிகளை மலையகத் தமிழ் சமுதாயத்தின் தொழிலற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவதற்காக ஈடுபடுத்தும்.”
ஜனாதிபதி இப்போது மக்களுக்கு வழங்குவதற்கு காணியைத் தேடித்தருமாறு கேட்பதாக, இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ் முற்போற்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான, தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.
“மக்கள் நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள் இந்த அரசாங்கம் உங்களுக்கு காணி கொடுக்காது. நாங்கள் போய் ஜனாதிபதியை கேட்டால் அவர் காணி எங்கு இருக்கிறது என எங்களிடம் கேட்கின்றார். நாங்கள் சொன்னோம் மலையகத்தின் எல்லா இடத்திலும் காணி இருக்கிறது, அதனை கொடுங்கள் எனக் கூறினோம். எமது மலையக மக்கள் காணி உரிமையுடன் வாழ்வதை எந்த வகையிலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.”
மலையகத்தில் காணியைப் பெற்றுக்கொள்வதில் எழுந்துள்ள பிரச்சினையை விளக்கிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன், நிலத்தின் உரிமை இரண்டு அரசு நிறுவனங்களுக்கு இடையில் ‘ஊசலாடுகிறது’ என சுட்டிக்காட்டினார்.
“நாங்கள் இருந்த நேரத்தில் பேசி பெற்றுக்கொண்ட ஏழு பேர்ச். அந்த ஏழு பேர்ச் காணியையாவது கொடுங்கள். நீங்கள் வீடுகளை அமைக்கத் தேவையில்லை காணியை கொடுங்கள்.நாங்கள் எப்படியாவது, கடனைப் பெற்றாவது வீட்டை கட்டிக்கொள்வோம். ஆகவே வீட்டை அமைப்பதற்கு காணி அத்தியாவசியம். ஆகவே இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகின்றோம். காணியை எங்கு பெற்றுக்கொள்வது? நாங்கள் எங்கு இருக்கின்றோம். தோட்டத்தில் இருக்கின்றோம். தோட்டக் காணியை பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஜனவசம சொல்கிறது எல்ஆர்சிக்கு சொந்தம் என. எல்ஆர்சி சொல்கிறது ஜனவசமவிற்கு சொந்தமென. யாருக்கு சொந்தம் என்பதை நீதிமன்றமே இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆகவே மக்களுக்கு எப்போது கொடுக்கப்போகிறீர்கள். ”
இத்தகைய சூழ்நிலையில், மலையக தமிழ் மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு செயலணியை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
“ஆகவே ஜனாதிபதி ஒரு செயலணியை உருவாக்கி, அதன் ஊடாக காணிப் பிரச்சினைக்கு ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். எதுவெதுக்கோ எல்லாம் செயலணியை அமைக்கின்றார். ஆகேவே செயலணியை அமைத்து இந்த காணி பிரச்சினையை தீர்த்தால் என்ன?”
மார்ச் 7, 2026 அன்று கொட்டகலை சித்திவிநாயகர் கலாசார மண்டபத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மலையக வாழ்வுரிமை மாநாட்டில், கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
