வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, ஜனாதிபதி டிரம்பின் மிக நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களில் ஒருவர் இப்பதவியிலிருந்து விலகுவது குறிப்பிடத்தக்கது.
பதவி விலகலுக்குப் பிறகு, ஜனாதிபதி டிரம்பின் “மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (MAGA) இயக்கத்தின் எதிர்கால வடிவத்தை வடிவமைக்கும் வெளியாரிடத் தொடர்பு ஆலோசகராகவும் கட்சிப் பணியாளராகவும் லீவிட் செயல்படுவார் என்று அவரும், டிரம்பும் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லீவிட் (28) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தனது இளம் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதை நோக்கமாக்கிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் தனது இரண்டாவது குழந்தையான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அவர், சமீபத்தில்தான் பேறுகால விடுமுறையிலிருந்து பணிக்குத் திரும்பினார்.
அதேவேளையில், வெள்ளை மாளிகையில் பணியாற்றிய அனுபவத்தை “வாழ்நாளின் பெருமை மற்றும் மறக்க முடியாத பயணம்” என லீவிட் வர்ணித்துள்ளார்.
நேட்டோ உச்சிமாநாட்டின் சர்ச்சை பின்னணியில் விலகல்
துருக்கியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ‘நேட்டோ’ உச்சிமாநாட்டிலிருந்து திரும்பும்போது, அமைச்சரவை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களை ஏற்றிச் சென்ற விமானத்தை அதிபர் டிரம்ப் ஒரு “திசைதிருப்பும் யுக்தியாகப்” பயன்படுத்தினார் என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் இந்த வாரம் செய்தி வெளியிட்டது.
இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் லீவிட் தனது பதவி விலகல் முடிவை எடுத்துள்ளார்.
ஈரானிய படுகொலை அச்சுறுத்தலை எதிர்கொண்ட டிரம்ப்பை, ரகசிய புலனாய்வுத் துறையினர் ஒரு உணவு விநியோக டிரக்கின் பின்புறம் ஏற்றி, இரகசியமாக ஒரு ஜெட் விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு மாற்றியதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
அசல் ஜெட் விமானத்தில் இருந்த செய்தியாளர்களும் ஊழியர்களும் டிரம்பின் இந்த நகர்வைப் பற்றி அறியாமல் இருந்தனர். இது வழக்கமான மரபுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சம்பவமாகக் கருதப்படுகிறது.
