“ அச்சுறுத்தி எமது அரசியல் பயணத்தை தடுப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தீர்மானம் எடுக்கும் அணி அல்ல எமது கட்சி.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதில் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அச்சுறுத்தல்மூலம் அரசியல் பயணத்தை தடுக்கலாம் என சிலர் நினைக்கின்றனர், மே 9 ஆம் திகதியும் அந்த முயற்சி எடுக்கப்பட்டது. அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தீர்மானம் எடுப்பவர்கள் அல்லர் நாம். மஹிந்த ராஜபக்ச காலத்திலும் அவ்வாறு முடிவெடுக்கவில்லை. இனியும் எடுக்கப்போவதும் இல்லை.
வெற்றிகரமான அரசியல் முடிவுகளையே எடுப்போம். அடுத்து எந்த தேர்தல் என்பது எமக்கு தெரியாது. அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் பொதுத்தேர்தல் எனக் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் வெற்றிகரமான ஆட்டத்தையே நாம் ஆடுவோம். அதற்கேற்ற வகையில் அரசியல் முடிவுகளை எடுப்போம்.” – என்றார்.