பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் பிரச்சார போர் முழு வீச்சுடன் இடம்பெறவுள்ளது.
தேசிய ரீதியிலான பிரதான அரசியல் கட்சிகள் தொகுதி மற்றும் மாவட்ட ரீதியில் கூட்டங்களை நடத்துவதற்கும், 22 தேர்தல் மாவட்டங்களிலும் 22 பாரிய பிரதானக் கூட்டங்களை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளன.
சீரற்ற காலநிலையால் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. எனினும், அடுத்த வாரம் முதல் முழு வீச்சுடன் பிரச்சார பணி இடம்பெறவுள்ளது.
அத்துடன், மாகாணம் மற்றும் மாவட்டங்களை மையப்படுத்தி செயற்படும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் என்பன அதற்கேற்ற வகையில் கூட்டங்களை நடத்தவுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் பிரதான பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பார் என தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதான பிரசாரக் கூட்டங்களில் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்பார். அக்கூட்டங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.
அதேவேளை, சிலிண்டர் கூட்டணியின் பிரசாரக் கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பங்கேற்க வைப்பதற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அது கைகூடாத பட்சத்தில் மாவட்ட தலைவர்கள்தான் பரப்புரை போரை வழிநடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மொட்டு கட்சியின் ஓரிரு கூட்டங்களில் மாத்திரமே பங்கேற்கக்கூடும். மற்றுப்படி நாமல் ராஜபக்சவே கட்சியை முழுமையாக வழிநடத்தவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் வடக்கு, கிழக்குக்கும் பிரசாரத்துக்காக வருகை தரவுள்ளனர்.
இன்று ஓரிரு பகுதிகளில் பிரச்சாரம் இடம்பெற்றாலும் திங்கள் முதலே அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.










