வடக்கு மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கினால்போதும். அதிகாரப்பகிர்வு அவசியமில்லை. அதனை வழங்குவதற்கு நாம் இடமளிக்கபோவதுமில்லை – என்று ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தையும், அதிகாரப்பகிர்வையும் நாம் ஏற்கவில்லை. அதற்கு இன்றளவிலும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றோம். 13 இல் நாட்டில் இருந்த சமவாழ்வு இல்லாமல்போய், வீண் பிரச்சினைகள்தான் உருவாகின. எனவே, 13 என்பது தீர்வுபொறிமுறையாக அமையாது.
வடக்கு மக்களுக்கு 13 முக்கியமல்ல, உண்பதற்கு உணவு இருக்கவேண்டும், வாழ்வதற்கு வீடு வேண்டும். இவற்றுக்கான தீர்வை வழங்கலாம். காணி பிரச்சினை இருந்தால் அது தொடர்பிலும் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி தீர்த்துக்கொள்ளலாம்.
இதனைவிடுத்து தன்னாட்சியில் தொங்கிக்கொண்டிருப்பது நியாயமில்லை. தமிழர்களுக்கு ஒரு வடிகாண்கூட அமைத்துக்கொடுக்காத கூட்டமைப்பு தன்னாட்சி கோருவது வெட்கக்கேடான செயலாகும். தேர்தல் காலங்களில் மக்களை திசைதிருப்புவதற்காகவே 13 பற்றியும், உரிமை குறித்தும் கதைக்கின்றனர்.” – என்றார்.