அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றறிக்கை வெளியானது

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான செயற்றிட்டமொன்றை நாளை முதல் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் MMPK மாயாதுன்னே இதற்கான சுற்றறிக்கையை இன்று அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கமைய அரசாங்க அலுவலகங்களினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தடையின்றி முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமாக தேவைப்படும் குறைந்த பட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரச செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்காக கடந்த மார்ச் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நடைமுறை அத்தியாவசியமான அரச சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக அமையக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles