ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் கன்னி வரவு – செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.
வரவு – செலவுத் திட்டத்தின் முன்னோடியான ஒதுக்கீட்டுச்சட்டமூலம் கடந்த ஜனவரி 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்கென முன்வைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே இரண்டாம் வாசிப்பான, வரவு -செலவுத் திட்ட வாசிப்பு இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதியால் நிகழ்த்தப்படவுள்ளது.
2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் செலவீனமாக 4 ஆயிரத்து 218 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு அரசாங்க செலவீனமாக 6 ஆயிரத்து 978 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டிருந்தது. அந்தவகையில் கடந்த வருடத்தைவிட இம்முறை அரச செலவீனம் குறைவடைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 713 பில்லியன் ரூபா மேற்படி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்கு 442 பில்லியன் ரூபாவும், சுகாதாரம் அமைச்சும் ஊடகத்துறை அமைச்சுக்கு 507 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை ஏழு நாட்கள் இடம்பெறவுள்ளது.
அத்துடன் பெப்ரவரி 25ஆம் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான வாக்கெடுப்பை மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
