“ அநுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டுக்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை. அவர்களது கட்சியினர் தமக்கு எதிரான தரப்பினரின் வீடுகளை எரிக்க காத்திருக்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.” – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்ரமசிங்கவை நான் 1989 இல் இருந்து அறிவேன். எங்களுக்கிடையில் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தன. நானும் அவரை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் நாடு வீழ்ந்தபோது, நான் அவரை பாராளுமன்றத்தில் மின்தூக்கிக் கருகில் சந்தித்தேன்.
அனைத்துக் கட்சி மாநாடு நடத்தி, நாடு வீழ்ந்தபோது தலைமைப் பொறுப்பை ஏற்க பொருத்தமான ஒருவரைத் தேடலாம் என்று கூறினார். அந்த அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு அவர் வருகை தந்தார். நீங்கள் பதவிக்குப் பின்னால் செல்லும் நபரல்ல. மேலும் அவர் குடும்பத்திற்காக செயற்படும் அரசியல்வாதியுமல்ல.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது.நாட்டின் நலனுக்காக நாம் முடிவுகளை எடுக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த வேண்டும் என மத்திய குழுவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்ற நடைமுறைச்சாத்தியமான தீர்மானத்தை நாம் எடுத்தோம். நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என சிலர் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டுக்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை. அவர்களது கட்சியினர் தமக்கு எதிரான தரப்பினரின் வீடுகளை எரிக்க காத்திருக்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. சஜித் கிளிப்பிள்ளை போல் பேசுகிறார்.நாடுபூராவும் சென்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்” என்றார்.
