” மெதமுலனையில் வளவு இருக்கின்றது எனக் கூறிக்கொண்டாலும் ராஜபக்ச குடும்பங்கள் அரச வீடுகளில்தான் வாழ்கின்றனர். வெட்கக்கேடு…”
இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்று விளாசித்தள்ளினார் அநுரகுமார திஸாநாயக்க.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செலகத்தில் இருந்து நாடாளுமன்றம்வரும்போது பின்னால் ஆம்பியூலன்ஸ் வண்டி வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விஜயராம பகுதியில் இருந்து நாடாளுமன்றம்வரும்போது ஆம்பியூலன்ஸ் வண்டி பின்னால் வருகின்றது. இவர்கள் என்ன நோயாளிகளா? வைத்தியசாலைகளுக்கு இன்று ஆம்பியூலன்ஸ் வண்டி இல்லை. 5 கிலோ மீற்றர் தூரம்கூட இல்லை. ஆனால் அவர்கள் பயணிக்கும்போது ஆம்பியூலன்ஸ் வண்டியும் செல்கின்றது.
இது மக்களின் பணம், வரி செலுத்தும் வியாபாரிகள் இவற்றை பார்த்துகொண்டுதான் இருக்கின்றனர்.
நாமல் ராஜபக்சவுக்கு எப்படி அரச வீடு வழங்கப்பட்டது? மெதமுலனையில் வளவு இருக்கின்றது எனக் கூறப்பட்டாலும் தந்தை, சித்தப்பா, பெரியப்பா என எல்லோரும் அரச வீடுகளில் இருந்துதான் வாழ்கின்றனர். இது வெட்கக்கேடு.
‘பார்ட்டி” வைக்கின்றனர், பின்னர் கண்காணிப்பு பயணம் எனக் கூறப்படுகின்றது. நடப்பதற்குகூட முடியவில்லை, அதுவும் இரவில் கண்காணிப்பு பயணம் செல்கின்றனர். எதற்காக இரவில் செல்கின்றனர் என்பது எமக்கு தெரியும். 20 மீற்றர்வரைதான் பார்வை விளங்கும். ஆனால் இரவில் கண்காணிப்பு பயணம் செல்கின்றனர்.” – என்றார்.
