அமெரிக்க தளங்கள்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

முன்னதாக கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து இங்கிலாந்து அரசும் கத்தாரில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன.

மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளம் கத்தாரில் உள்ளது. வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, சுமார் 8,000 அமெரிக்க குடிமக்கள் அங்கு வசிக்கின்றனர்.

அதே போல மத்திய கிழக்கில் அமெரிக்காவின் அனைத்து விமான நடவடிக்கைகளையும் நிர்வகிக்கும் சென்ட்காம் தலைமையகமும் கத்தாரில்தான் உள்ளது. அங்கு பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள். அத்துடன் மத்திய கிழக்கில் சுமார் 40,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் இரண்டாவது வாரமாக தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Related Articles

Latest Articles