கூட்டணி கட்சிகளிடையேயான கருத்து முரண்பாடு ஆரோக்கியமானது. அது அரசாங்கம் பிளவுபட்டுள்ளதாக அர்த்தமாகாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் மோதல் காணப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
பொதுஜன பெரமுனவில் ஏற்பட்டுள்ள உள்ளக கருத்து முரண்பாடு அரசு இரண்டாக பிரியலாமென்று கூறப்படுகிறது. ஆனால், கூட்டணி அரசாங்கமுள்ள அனைத்து நாடுகளிலும் இவ்வாறு முரண்பாடு ஏற்படும். 1970- –77 காலத்தில் சமகி பெரமுன இருந்தது. அதன் பின்னரும் கூட்டணி அரசே இருந்தது. வரலாற்றில் 1956 அரசும் கூட்டணி அரசே. அன்றும் கருத்து முரண்பாடு இருந்தது.
கட்சிகளிடையேயான கருத்துமுரண்பாடு ஆரோக்கியமான நிலைமையாகவே நோக்க வேண்டும். எமது அரசின் அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட முன்வைக்கப்பட்டது. அதன் மூலம் அரசு பிரியவில்லை. அரசாங்கத்திற்குள் பல்வேறுபட்ட கருத்துக்கள் முரண்பாடுகள் ஏற்படுவது ஆரோக்கியமான போக்காகும். இந்திய, பிரிட்டன் கூட்டணி அரசுகளில் கூட இந்த நிலை உள்ளது. கூட்டணி என்பதே வேறுபட்ட கருத்துகளின் கூட்டணியாகும். எதிர்க்கட்சி என்பதும் பெரிய கூட்டணியாகும்.
அங்கும் மாறுபட்ட கருத்து இருக்கிறது. அதற்காக யாரும் எதிரணி பிரியப்போகிறது என்று சொல்வதில்லை. இது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம்.அதனை விடுத்து இந்த நிலை கட்சிகளின் இறுதிக்கட்டமென கருதக் கூடாது.
அமைச்சரவையோ ஜனாதிபதி யோ பிரதமரோ கண்டும் காணாமல் இருக்கவில்லை. டொலர் பிரச்சினை பல நாடுகளுக்கு சவாலாக உள்ளது. தொற்று நிலையில் இது மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.முதலில் மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும்.