அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள், அவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதற்குத் தீர்மானம் எடுத்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து அரசாங்கத்துக்கு இழக்கப்பட்ட நிதியை மீண்டும் அறவிட்டுக் கொள்வதற்கும், அவர்களை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆற்றுப்படுத்தி தண்டனையைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அதிகாரங்கள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் கூடியபோது இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இது பற்றிய கருத்துக்களை முன்வைத்தனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான திருத்தம், அமைச்சரவை குறித்த திருத்தம், அரசாங்க சேவையை மறுசீரமைப்பது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இச்சங்கத்தின் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
டிஜிட்டல் மயமாக்கல் மூலம் அரச சேவையை புதுப்பிப்பதற்கு தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்குவதற்கு உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து உபகுழு விரிவாகக் கலந்துரையாடியதுடன், வினைத்திறனான அரச சேவையை உருவாக்குவதற்கு இது மிகவும் இன்றியமையாத காரணி என சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அரச சேவையை புதுப்பித்தல் தொடர்பான குறுகிய கால திருத்த முன்மொழிவுகளை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உபகுழுவின் தலைவர், இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
தேசிய பேரவையின் ஊடாக பாராளுமன்றத்தில் திருத்தங்களை சமர்ப்பித்ததன் பின்னர் தேசிய கொள்கையொன்றை விரைவாக தயாரிக்க முடியும் என உபகுழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய கொள்கையொன்றில் இருந்து அரச சேவையை சீர்திருத்துவதன் ஊடாக மக்களுக்கு தேவையான சேவைகளை விரைவாகவும் அதிக வினைத்திறனுடனும் வழங்க முடியும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்டன் பெர்னாந்து மற்றும் கௌரவ சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
