அரசாங்கத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ள 7500 ரூபா நிவாரணக் கொடுப்பனவை பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பெற்றுகொடுக்க ஆழமான கோரிக்கைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குறைந்த வருமானம் பெறும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பெருந்தோட்டப் பகுதியில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்தம் சம்பளத்தைக்கொண்டு அவர்களால் வாழ முடியாது. இலங்கையை பொருத்தமற்றில் மிகவும் வருமானம் குறைந்த தரப்பினராக பெருந்தோட்டத் தொழிலாளர்களே உள்ளனர்.
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாதுள்ள இந்த மக்களுக்கு அரசாங்கம் அதன் நிவாரணத் திட்டங்களில் முன்னுரிமையளிக்க வேண்டும்.
அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள 7500 ரூபா நிவாரணம் முழுமையாக பெருந்தோட்டங்களில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் இந்தத் தருணத்தில் கிடைக்கப் பெற வேண்டியது அவசியமாகும். அதற்கான ஆழமான அழுத்தங்கள் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்கள் உடனடியாக மரக்கறி மற்றும் ஏனைய உற்பத்திக்காக இவர்களுக்கு வழங்கப்படுவதற்கான கோரிக்கைகளையும் பிரதமரிடம் முன்வைத்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.










