அரச பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயத்தில் உள்ளன என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எம்.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் பெருவாரியாக வெளியாட்களுக்கு கையளிக்கும் செயற்பாடுகள் இடம் பெற்று வருவது கண்டிக்கத்தக்கது, குறிப்பாக இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த காணி பறிமுதல் செய்யும் வேலையை அரசாங்கம் முன்னெடுத்து வருவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்,
மலையக மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் இருக்கும் சிலர் தங்களுடைய சுய நலத்துக்காக இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் பக்கம் நிற்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும், இவர்களின் இவ்வாறான காட்டிக் கொடுப்புகளை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை இவர்கள் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்,
இவ்விடயம் தொடர்பில் அதிக கரிசனையுடன் செயற்பட்டுவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வேலு குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,மேலும் மலையக மக்களின் பிரதிநிதிகள் இதற்கு எதிராக அணி திரள வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்,
இரத்தினபுரி மாவட்டத்திலும் இவ்வாறான தோட்ட காணிகள் கைப்பற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதை நாம் அவதானிக்கலாம் குறிப்பாக ஹேயஸ் மற்றும் பனில்கந்தை ஆகிய தோட்டங்களில் பல நூறு ஏக்கர் காணி கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தனியாருக்கு வழங்ப்பட்டுள்ளது,
அத்துடன் இன்றும் இத்தோட்டங்களில் ஆங்காங்கே காணிகள் கைப்பற்றப்பட்டு வருவதை காணலாம், இவ்வாறான காணி பறிமுதல் செய்யும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு அந்த காணிகள் தோட்ட மக்களுக்கு பிரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லைஎன்றால் இருநூறு வருடங்கள் நாம் பாதுகாத்த காணி எம்மிடமிருந்து பறிபோவதை நாம் தவிர்க்க முடியாது போய் விடும்,
எனவே இந்த காணி பறிமுதல் செய்யும் செயற்பாட்டை அனனைத்து மலையக மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் போராட அணி திரள வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.