அரசாங்க வைத்தியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் இயங்குகின்ற தனியார் வைத்தியாசாலைகள் அனைத்தும் வழமைபோல் இயங்குகின்றன.
விசேட வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு வழமைபோல் விஜயம் செய்து நோயாளர்களை பரிசோதித்து வருகின்றனர். சில தனியார் வைத்தியசாலைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றது. தங்களுடைய வருமானத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்ற ஒரே குழுவினர் இந்த வைத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த அளவில் மிகவும் குறைவான வருமானத்தை கொண்டிருக்கின்ற பெருந்தோட்ட தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்ற ஒரு பகுதியாகும். இவ்வாறான ஒரு நிலையில் அரசாங்க வைத்தியசாலைகள் வேலை நிறுத்தம் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்ற நிலையில் தனியார் மருத்துவ மனைகளில் சென்று தாங்கள் மருந்துகளை பெற்றுக் கொள்ள வேண்டிய ஒரு துர்பாக்கியமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா ஹட்டன் தலாவக்கலை மஸ்கெலியா பொகவந்தலாவை இராகலை உடபுஸ்ஸல்லாவ உட்பட ஏனைய பகுதிகளிலும் தனியார் வைத்தியசாலைகளும் சிறிய மருந்தகங்களும் வழமைபோல தங்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக விசேட வைத்திய நிபுணர்களை பார்வையிடுவதற்காக தனியார் வைத்தியசாலைகளில் நேரம் ஒதுக்கப்பட்டு நோயாளர்களுக்கு வருகை தர வேண்டிய நேரமும் குறிப்பிடப்படுகின்றது.
தொடர்ந்து அரசாங்க வைத்தியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தனியார் வைத்தியசாகைளில் மனிதாபிமானமற்ற முறையில் தங்களுடைய தொழிலை முன்னெடுப்பது எந்தளவில் நியாயமானது என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் எங்களுடைய வரிப்பணத்தில் தங்களுடைய கல்வியை கற்று இந்த நிரக்கு உயர்ந்தவர்கள் ஏன் பொது மக்களைப்பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இன்றைய நிலையில் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் தங்களுடைய உயிரை பாதுகாத்து கொள்ளவும் பெரும் தொகை பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை துரதிஸ்டவசமானது எனவும் பொது மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
