அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிபுரை விடுப்பது எனக் கட்சியின் அரசியல் குழு இன்று கூடி முடிவெடுத்திருக்கின்றது.
கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று பிற்பகலில் வவுனியாவில் கூடிய அரசியல் குழு இந்த முடிவை எடுத்திருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இன்று இந்த முடிவை எடுத்த போது அந்தக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரன் எம்.பி. ஆகியோர் பங்குபற்றவில்லை.
சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் மற்றும் கலையரசன், துரைராஜசிங்கம் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பில் அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி நடத்திய மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வின் போது முன்னர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட அரியநேத்திரனை ஈகைச்சுடர் ஏற்ற அழைத்த செயல் தொடர்பில் கட்சியின் அரசியல் குழு இன்று விரிவாக ஆராய்ந்தது. அந்த விடயத்தில் அரியநேத்திரனை அந்த நிகழ்ச்சிக்குள் புகுத்தியமை முழுத் தவறு என்பதை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசனுக்கு எடுத்துரைக்கவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.










