அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தனின் பெயர் பரிந்துரை!

அரசியலமைப்பு பேரவைக்கு தமது கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை பரிந்துரைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டது.

அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டும். அதன் தலைவராக சபாநாயகர் செயற்படுவார்.

பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இதில் நிரந்தர உறுப்புரிமையை பெற்றிருப்பர். அதாவது மேற்படி பதவிகளை வகிப்பவர்கள் பதவிநிலை அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள்.

ஜனாதிபதியின் பிரதிநிதியொருவர் இடம்பிடித்திருப்பார், அந்தவகையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக நிமல் சிறிபாலடி சில்வா பெயரிடப்பட்டுள்ளார்.

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து மேலும் இருவரை தெரிவுசெய்வர்.

அதற்கு மேலதிகமாக மூன்று சிவில் பிரதிநிதிகளுக்கு (கட்சிசாராத) இடமளிக்கப்பட வேண்டும்.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் வகிக்கும் கட்சியை சாராத, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும். அந்த வாய்ப்பு தமிழ்க் கூட்டமைப்புக்கு கிட்டும். அந்த இடத்துக்கே சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles