அரசியல் கட்சி ஆரம்பித்தார் எலான் மஸ்க்!

 

“அமெரிக்கா பார்ட்டி” என்ற புதிய அரசியல் கட்சியை எலான் மஸ்க் ஆரம்பித்துள்ளார். இதனால் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் உக்கிரமடைந்துள்ளது.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்கின்றார்.

கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார். இதனால் எலான் மஸ்க் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார்.

எனினும், வரி தொடர்பான புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், டிரம்ப் அரசு வழங்கிய பதவியில் இருந்து விலகி டிரம்புக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதிய கட்சியை தொடங்குவது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பும் கேட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles