நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் இன்னமும் ஆளுங்கட்சி வசம்தான் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன. அவ்வாறு இல்லையென எதிரணி நிரூபிக்குமானால், அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கு அரசு தயார் எனவும் அவர் அறிவிப்பு விடுத்தார்
இது தொடர்பில் அவர் இரு யோசனைகளையும் முன்வைத்தார்.
1. நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றி பொதுத்தேர்தலுக்கு செல்லலாம்.
( அரசமைப்பின் பிரகாரம், முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்று, இரண்டரை வருடங்களுக்கு பிறகே அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. எனினும், நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டால் முன்கூட்டியே கலைக்கலாம். அந்த யோசனைதான் இது.)
2. எதிரணிக்குதான் போதுமானளவு பெரும்பான்மை உள்ளதெனில், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை ஜனாதிபதியிடம் கோரலாம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என கோரி போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அந்த கோரிக்கையை ஏற்பதற்கு அரசு தயார் இல்லை. மாறாக கூட்டரசை அமைக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சி உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் நிராகரித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் அரசுக்கான ஆதரவை 42 உறுப்பினர்கள் விலக்கிக்கொண்டுள்ளனர். சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவித்துள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து எதிரணிகளும், அரசில் இருந்து வெளியேறியவர்களும் ஒன்றிணைந்தால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை காட்ட முடியும். ஆனால் இந்த தேர்வுக்கு எதிரணிகள் தயார் இல்லை. இதனால் அரசமைப்பு மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன,
“ ஜனாதிபதி அரசமைப்பை மீறி ஒருபோதும்
செயற்படமாட்டார். அதனால்தான் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். எனவே, நெருக்கடி நிலைமை உக்கிரமடைய இடமளிக்க வேண்டாம்.” என கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
“ மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை எங்களுக்கும் புரிகின்றது. யோசனைகள் இருப்பின் முன்வைக்கவும். அரசமைப்பைமீறி எந்தவொரு தரப்பாலும் செயற்படமுடியாது – செயற்படவும் கூடாது. “ – என்வும் தினேஷ் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில் ஜனநாயக வழியில்தான் ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை நாமல் ராஜபக்ச விடுத்தார்.
அதேவேளை, தற்போதைய அரசியல் நெருக்கடி தீர ஜனாதிபதியும், அரசும் பதவி விலகுவதே சிறந்தவழியென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் அறிவித்தார். மக்களின் நிலைப்பாடும் அதுவாகவே உள்ளதெனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான சிறந்த தருணம் இதுவெனறும் குறிப்பிட்டு , அதற்கான யோசனையை முன்வைத்தார்.
தற்போதைய அரசில் நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,
“ நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற அதிகாரத்தை மக்கள் நிராகரிக்கின்றனர். இதனை நாம் ஏற்கவேண்டும். அதனால்தான் அமைச்சர்கள் பதவி துறக்கின்றனர். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகின்றனர். எனவே, சர்வக்கட்சி அரசு என்ற பொறிமுறையை மக்கள் நம்பமாட்டார்கள். அதனை நிராகரித்துள்ளனர். தற்போது மக்களின் நம்பிக்கைதான் முக்கியம். இந்த ஆட்சி இல்லாவிட்டால், மற்றைய தரப்புக்கு ஆட்சி கையளிக்கப்பட வேண்டும். ஆக – இந்த பிரச்சினைக்கு அரசமைப்பு ரீதியில் தற்போது தீர்வு இல்லை. எனவே, அரசமைப்புக்கு வெளியில் சென்று தீர்வை தேட வேண்டும் . அதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அவ்வாறு கண்டறியும் தீர்வை அரசமைப்புக்குள் உள்வாங்கலாம். அதற்கான யோசனையை முன்வைக்கலாம். அதற்கு மக்கள் ஆணையே சிறந்த வழி. எனவே, மக்களின் விருப்பத்துக்கேற்பவே அரசு அமைக்கப்பட வேண்டும்.” – என்றார்.
ஆர்.சனத்