அறகலயவுக்கு வெளிநாட்டிலிருந்து பணம்: எங்கள் ஆட்சியில் விசாரணை உறுதி!

“அறகலய தொடர்பிலும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் மற்றும் பின்புலம் தொடர்பில் எமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மறுபுறத்தில் தாம் கூறியது பொய் என்பது அம்பலமாகி வருகின்றது.

ஆளுங்கட்சிக்குள் நடக்கும் ஊழல்களும் வெளிவருகின்றன. எனவே, தமது இருப்பைக்காக்க அரசாங்கம் அடக்குமுறையை பயன்படுத்துகின்றது.

இந்த அடக்குமுறைக்கு அஞ்சி நாம் மௌனம் காக்க வேண்டும் என கருதியே அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகின்றது. ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேறாது. நாட்டு மக்களுக்காக நாம் முன்னிலையாவோம்.

1988 காலம் முதலே தமது அரசியலுக்காக இளைஞர்களின் உயிரை ஜே.வி.பி. பயன்படுத்திவருகின்றது. அறகலய காலத்திலும் அது நடந்தது. இளைஞர்கள் இன்று தண்டனை எதிர்கொள்கின்றனர். அவர்கள் (ஜே.வி.பி.) ஆட்சிக்கு வந்துள்ளனர்.

அறகலய மற்றும் அதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு எமது ஆட்சியில் விசாரணை நடத்தப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles