சர்வதேச ஆசிரியர் தினமாகிய இன்று, கடந்த 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாத சம்பள முரண்பாட்டினை தீர்க்கக் கோரியும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க கோரியும் நாடு தழுவிய ரீதியில் அதிபர்- ஆசிரியர்கள் கோட்ட மட்டத்திலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

மாதா, பிதா குரு, தெய்வம் என பெயரளவில் மாத்திரமே எமது சமூகம் ஆசிரியர்களை உயர்வாக கூறுகிறது. உண்மையிலேயே ஆசிரியர்கள் பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ளதோடு பாரியளவில் பொருளாதார பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே இந்த ஆசிரியர் தினத்திலாவது இச்சம்பள முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் இப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில்:
1. ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வினை வழங்கு!
2. பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்து!
3. தொற்று நோயினால் வீழ்ச்சி அடைந்துள்ள கல்வியை மீட்க நிதி ஒதுக்கு!
4. இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும் !
5. ஆசிரியர் அதிபர்களின் தொழில் கௌரவத்தைக் கெடுக்காதே!
6. கல்விக்காக 6% ஆன நிதியை ஒதுக்கீடுசெய்!
7. பெற்றோரே, இது உங்களது பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்கான போராட்டம்! போன்ற பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் கோஷங்களும் எழுப்பப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைமையில் இரத்தினபுரி காவத்தை நகரில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் உட்பட நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(ரா.கமல்)










