ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை – குவியும் பாராட்டுகள்!

தங்க நகைகள் மற்றும் பணத்துடன் வழியில் கிடந்த பையை பொலிஸில் ஒப்படைத்து, அது உரியவர்களிடம் சென்றடைய நடவடிக்கை எடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிகின்றது.

மடூல்சீமை றோபேரி தோட்டத்தில் வசிக்கும் சசிகலா என்ற பெண்ணின் தாயார், சுகயீனமுற்று பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த தனது தாயார் அணிந்திருந்த தங்க ஆபரணங்களான
2 பவுன் சங்கிலி, மோதிரம் ஒன்றும், ஒரு பவுன் மதிக்கத்தக்க தோடுகள் என்பவற்றுடன் 2,440 ரூபா பணம் என்பவற்றை தனது கைப்பையில் எடுத்துக் கொண்டு பதுளையில் இருந்து பசறை வழியாக பிட்டமாறுவை பகுதிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார் சசிகலா. இதன்போது அவரின் பை தவறிவிழுந்துள்ளது.

இந்நிலையில் மாளிகாத்தன்னை பகுதியில் இருந்து, யூரி பௌத்த விகாரைக்கு செல்வதற்காக விகாரையில் தேரரையும் ஏற்றிக் கொண்டு சென்ற தியாகராஜா என்ற ஆட்டோ ஓட்டுநர், மடூல்சீமை செல்லும் வீதியில் 6ஆம் கட்டைப் பகுதியில் குறித்த கைப்பையை வீதியில் இருந்து கண்டெடுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த கைப்பையை பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த கைப்பையிலிருந்த தேசிய அடையாள அட்டையின் விலாசத்தை அவதானித்து, உடன் மடூல்சீமை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததன் பின்னர் குறித்த பெண்ணை பசறை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து குறித்த பெண்ணிடம் மேற்குறிப்பிட்ட பொருட்களடங்கிய கைப்பை ஒப்படைக்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜாவின் செயல்பாடு அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles