ஆபத்தான பயணம்: என்று அமையும் பாலம்?
அம்பகமுவ பிரதேச சபை மற்றும் நாவலப்பிட்டி நகரசபைக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கும் இம்புல்பிட்டி , மெதகாவதுர பிரதேசத்துக்கு பெயிலி வீதியூடாக செல்லும் மகாவலி ஆற்றைக் கடக்கும் 150 மீற்றர் தூரம் கொண்ட பாலம் இன்னைமையால் அப்பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அப்பிரதேசத்திலிருந்து மகாவலி ஆற்றைக் கடந்து 5 நிமிடத்தில் நாவலப்பிட்டி பெயிலி வீதி ஊடாக பிரதான நகரை வந்தடைய முடியும்.
மகாவலி ஆற்றைக் கடக்க பல ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட பாலம் , வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையில் , நாவலப்பிட்டி நகரசபையால் ‘ஆட்டுப்பாலம்’ நிர்மாணிக்கப்பட்டது.
எனினும், வெள்ளம் காரணமாக அதுவும் சேதமடைந்தது.
எனவே தினமும் தொழில் நடவடிக்கைகளுக்காகவும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி தற்காலிகமாக மூங்கிலால் செய்யப்பட்ட படகு மூலமே தற்போது அப்பிரதேச மக்கள் ஆற்றை பாரிய ஆபத்திற்கு மத்தியில் தினமும் கடந்து வருகின்றனர்.
குறிப்பிட்ட பிரசே வாசிகளால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மூக்கிலால் செய்யப்பட்ட படகில் 150 மீற்றர் ஆற்றைக் கடந்து பயணிக்க 20 ரூபா வரை கட்டணம் அறவிடப்படுகிறது.
வந்து செல்ல சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 40 ரூபா ஒருவருக்கு தேவைப்படுகின்றது. மாதமொன்றுக்கு 1200 ரூபா நபர் ஒருவருக்கு தேவைப்படகிறது. ஒரு குடும்பத்தில் சாதாரணமாக 4 பேர் பயணிப்பவர்கள் எனின் மாதமொன்றுக்கு 4800 ரூபா வரை ஆற்றைக் கடக்க செலவளிக்க வேண்டியுள்ளது.
மேலும் மழை காலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டால் ஆற்றைக் கடப்பது அபாயகரமாக பயணிக்க வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வி. தீபன்ராஜ்