ஆப்கானிஸ்தானில் ஆயுதம் தாக்கிய தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அங்கு தொடர் கொடுரங்கள் நிகழ்ந்துவருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
குறிப்பாக மனித உரிமைக்கும், பெண்களுக்கும் இடமில்லை என்றும், கருத்துச் சுதந்திரம் வெகுவாக நசுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதேவேளை, தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதன் அண்மைய சம்பவமாக இந்தவாரமும் ஒரு குண்டுத் தாக்குதல் பதிவாகியுள்ளது. அத்துடன் மிக மோசமான அண்மைய குண்டு வெடிப்புச் சம்பவமாக காபூல் கல்வி மையத்தில் நடத்தப்பட்ட சம்பவம் பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் காபூலில் கல்வி மையத்தில் கடந்த 30ஆம் திகதி நடந்த குண்டு வெடிப்பு குறித்து தொடர் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குண்டு வெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.

காஜ் கல்வி மையத்தில் இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காபூல் பொலிஸ் நிலையப் பேச்சாளர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக, வெடிப்பு மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படைகள் அப்பகுதியை அடைந்துவிட்டன, ”என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
ஹசாரா சுற்றுப்புறத்தில் உள்ள காஜ் கல்வி மையத்தை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி மாணவர்கள் மத்தியில் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக, தன்னார்வ தொண்டு நிறுவனமான ஆப்கான் பீஸ் வாட்ச் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
காபூலில் உள்ள வசீர் அக்பர் கான் பகுதிக்கு அருகே வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது, இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பும் நடத்தப்பட்டிருந்தது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசாங்கம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மனித மற்றும் பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் பல உறுதிமொழிகளை தலிபான்கள் மீறிவிட்டதாக தற்போது எதிர்ப்புக் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், காபூலைக் கைப்பற்றிய பின்னர், இஸ்லாமிய அதிகாரிகள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர், ஊடகங்களை நசுக்கினர், மேலும் பலர் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர். எதிர்ப்பாளர்கள் தூக்கிலிடப்பட்டனர் என்ற தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணமுள்ளன.
தலிபான்களின் மனித உரிமை மீறல்கள் பரவலான கண்டனத்தையும், நாட்டின் மோசமான மனிதாபிமான சூழ்நிலையை நிவர்த்தி செய்வதற்கான சர்வதேச முயற்சிகளையும் தடுத்துள்ளது என்று மனித உரிமைக் குழுக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
