மலையக மக்களுக்கு அரச நியமனங்களை கூட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே பெற்றுக்கொடுத்தது. எதிர்காலத்திலும் பல திட்டங்கள் உள்ளன. எனவே, அரச ஊழியர்கள் எமக்கே ஆதரவை வழங்குவார்கள் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
தலவாக்கலை பகுதியில் 12.07.2020 அன்று மாலை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் என்பதைவிடவும் நாடும், நாட்டு மக்களுமே எமக்கு முக்கியம். எனவே, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றோம்.
நாளை தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகின்றது. மலையக இளைஞர், யுவதிகளுக்கு காங்கிரஸே அரசாங்க வேலைகளை பெற்றுக்கொடுத்தது. எம்மவர்களுக்கு அரச நியமனங்கள் கிடைக்கவேண்டும் என்பதில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உறுதியாக இருந்தார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆசிரியர் நியமனம், தபால் ஊழியர் நியமனம், தொடர்பாடல் அதிகாரிகள், மலையக உதவி ஆசிரியர்கள் என அந்த பட்டியல் நீள்கின்றது.
அதேபோல் பொதுத்தேர்தலில் பின்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிஸ் பிரதான பங்காளியாக இருக்கும். அந்த ஆட்சியின்போது அரச துறை உட்பட பல்துறைகளிலும் எமது இளைஞர், யுவதிகளுக்கு நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.
கடந்த ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின்போது மலையகத்தில் எந்தவொரு அரசாங்க நியமனமும் உரியவகையில் கிடைக்கவில்லை. எனவே, அரச ஊழியர்கள் தமது ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வழங்கவேண்டும். எமது வெற்றியில் அவர்களின் பங்களிப்பு இருக்கும் என உறுதியாக நம்புகின்றோம்.
அதேவேளை, 100 ரூபாவை வாங்கிக்கொடுக்கின்றோம் என தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய 88 ஆயிரம் ரூபாவை தடுத்தவர்களே இன்று ஆயிரம் ரூபா தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். நிச்சயம் ஆயிரம் ரூபாவை எந்தவொரு நிபந்தனையும் இன்றி பெற்றுக்கொடுப்போம். தேர்தல், வாக்குகள் என்பதைவிடவும் எமக்கு மக்களே முக்கியம்.










