” ஆறுமுகன் தொண்டமானின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்” – செந்தில் தொண்டமான்

“ மலையக மக்களுக்காக தேசியம் கடந்து ஓங்கி ஒலித்தக் குரல் மெளனித்து, இன்றுடன் ஓராண்டு கடக்கிறது. இவ்வோராண்டு கடந்ததைக்கூட ஏற்க முடியாத நாம், அந்த மாமனிதரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக முழுமூச்சாய் நின்று போராடிக்கொண்டு இருக்கிறோம்” என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு, ஈடுசெய்ய முடியாதது.எம் மலையக மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்காதவை. ‘தம்பி சேர்’ என்று பெருந்தோட்ட மக்களால் உரிமையுடன் அழைக்கப்படும் அமரர் ஆறுமுகன் தொண்டமான், மலையக மக்களின் காவல் தெய்வமாகவே செயற்பட்டார்.

“அவருடைய பெயரைக் கூறினாலேயே, தோட்டத் தொழிலாளர்களுக்கு தைரியம் வரும். அந்தளவுக்கு அவர், மலையக மக்களின் பாதுகாப்புக் கவசமாகவே செயற்பட்டார். அவரது அனுமதியின்றி மலையகத்திலிருந்து ஒரு கல்லைக்கூட அசைக்க முடியாது என்ற ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருந்த மாபெரும் மனிதர் அவர்.

“மலையக மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக, துணிச்சலுடன் செயற்பட்ட அவர், மலையக மக்களுக்கென கொள்கைகளை வகுத்துச் செயற்பட்ட உயரிய பண்புமிக்க கொள்கைவாதி. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுக்கு ஈடாக, மலையக மக்களுக்காகப் பணியாற்றிய ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் போன்றதொரு பெருந்தலைவர், கடந்த காலங்களில் மலையக மக்கள் கண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“மலையக மக்களுக்குச் சலுகைகளை வழங்கும் விடயத்தில், இதுவரை ஆட்சிபுரிந்த அரசாங்கங்கள் ஓரவஞ்சகமாக செயற்பட்ட காலங்களில், தனது அமைச்சுப் பதவியைத் துறந்து, அந்த மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரும்பாடுபட்டுள்ளார்.

“மலையகம் கற்றுத்தேர்ந்த சமூகமாக மாற வேண்டும் என்றும் இந்நாட்டை வழிநடத்தும் பதவிகளில் மலைய மக்கள் அமரவேண்டும் என்பதையும் தனது எதிர்காலத் திட்டமாக வைத்துச் செயற்பட்டார்.

“மலையக மைந்தனின் இறுதி ஆசையான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு, அவரது ஓராண்டு நினைவு தினத்துக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது மன ஆறுதலைத் தந்துள்ளது. இருந்தாலும், அவரது அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டுமென்பதே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய கடமையாகவுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே, எம் அனைவரினதும் இலட்சியப் பணியாகவுள்ளது.

“அதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்நின்றுச் செயற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர் விட்டுச் சென்ற பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். மலையக மக்களுக்காக இ.தொ.கா எப்போதும் முன்நின்றுச் செயற்படும். அவருடைய ஆத்மா சாந்தியடைய, இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்” என்று, செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles