இ.போ.ச. பஸ்களை மறித்து ஹட்டனில் தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான ஹட்டன் டிப்போவினால், ஹட்டனில் உள்ள தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்கப்பட்டுவந்த நிலையில், கடந்த 7 நாட்களாக டீசலை விநியோகிக்கவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன் பஸ் நிலையத்தில் இருந்து சேவையில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை மறித்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் (08) இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து தினசரி நீண்ட மற்றும் குறுகிய தூர பிரதேசங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களின் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் (08) காலை ஹட்டன் பஸ் நிலையத்தில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நேற்றைய தினம் சில தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்கப்பட்டதாகவும், ஏனையவர்களுக்கு இன்று டீசல் வழங்கப்படும் என தெரிவித்து டோக்கன் வழங்கப்பட்டதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், இன்றைய தினம் டோக்கன் வழங்கப்பட்ட பஸ் உரிமையார்கள் டீசல் பெற்றுக் கொள்வதற்காக சென்ற பொழுது, டீசல் இல்லை முடிந்து விட்டது என அட்டன் டிப்போ அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்றைய தினம் இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும், கடந்த சில நாட்களாக எரிபொருள் கிடைக்காததால் பல தனியார் பஸ்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் உட்பட அத்தியவசிய சேவைகளில் ஈடுப்படுவோரும் பெரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Related Articles

Latest Articles