இக்கட்டான நேரத்தில் இந்தியா பெற்றுத் தரும் ஆதரவுகளுக்கு நன்றி!

 

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையின் நெருங்கிய நண்பராக எம்மோடு சேர்ந்து உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் மகத்தான பங்களிப்பை ஆற்றியமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை (Santhosh Jha) இன்று (02) சந்தித்த வேளை, ​​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்தார்.

டித்வா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடித் தலையீட்டின் பிரகாரம் இந்திய அரசுக்குச் சொந்தமான சாகர் பந்து திட்டத்தின் கீழ் கப்பல்கள், நிவாரணக் குழுக்கள் மற்றும் இந்திய விமானப்படையின் விசேட பங்களிப்பு என்பவற்றை இலங்கைக்குப் பெற்றுத் தந்ததன் மூலம் பேரழிவால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை மீட்க முடிந்தது என்றும், பேரிடர் நிவாரணக் குழுக்கள், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் விசேட மீட்புக் குழுக்கள், மருத்துவர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், நடமாடும் வைத்தியசாலை சேவை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பல உதவிகள் சகிதம் இந்திய அரசாங்கம் பெற்றுத் தந்துகொண்டிருக்கும் ஆதரவை வார்த்தைகளில் சொல்லி முடிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

மனிதாபிமான உதவிகளை நிரப்பிக்கொண்டு பாகிஸ்தான் விமானங்கள் இலங்கைக்கு வரும்போது, இந்திய வான் பரப்பை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கி, இந்திய அரசாங்கம் எடுத்த இந்த முக்கிய தீர்மானத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டுக்களை வெளிப்படுத்தி இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்திய-பாகிஸ்தான் மோதல்கள் காணப்பட்ட போதிலும், இதுபோன்ற ஒரு மனிதாபிமான பிரச்சினை எழுந்த நேரத்தில், இந்திய அரசாங்கம் எடுத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை மிகவும் பாராட்டுகிறேன் என்றும், நெருங்கிய நண்பராக இந்தியா இந்நேரத்தில் இலங்கையுடன் இருப்பது ஒரு நாடாக எமக்கு பெரும் பக்கபலமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles