ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துகொண்டார் என வெளியாகியுள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
“ அவ்வாறானதொரு சம்பவம் நடக்கவில்லை, வெளியான தகவல்களில் உண்மை இல்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான சுஜிவ சேனசிங்க அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

“ பகிரப்பட்டு வரும் புகைப்படம் பழைய புகைப்படம் என்பதோடு,இதுபோன்ற புகைப்படத்தை பயன்படுத்தி அரசியல் பிரசாரம் செய்து வருவதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைவதால்,இவ்வாறான போலிப் பிரசாரங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறலாம்.இது தொடர்பாக நாம் கடும் அவதானத்துடன் இருப்போம்.
இவ்வாறான புகைப்படங்களை வெளியிடுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பைச் சேர்ந்த ஜெனரல் தயா ரத்நாயக்கவிடம் விசாரித்திருந்தால்,அது சிறந்த ஊடக நடைமுறையாக இருந்திருக்கும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.” – எனவும் சுஜிவ சேனசிங்கவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











