இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைகளின் முதிர்ச்சியின்மையால் மூத்த தலைவர்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வித நன்மையையும் கிடைக்கப்பெறவில்லை. சம்பள அதிகரிப்பும் இன்றுவரை சாத்தியப்படவில்லை. எவ்வித நிவாரண கொடுப்பனவும் விசேடமாக பெருந்தோட்ட மக்களுக்கு முன்வைக்கப்பட்டதாகவும் இல்லை. தொடர்ச்சியாக மலையக மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. அதனை பார்த்து தலையாட்டிக்கொண்டு இருப்பதற்கு மக்கள் எங்களை பாராளுமன்றம் அனுப்பவில்லை.
அநீதிக்கு எதிராக நாம் குரல்கொடுப்போம். கேள்வி கேட்போம். அதனை யாராலும் கொச்சைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் மூலம் நிறுத்திவிட முடியாது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பண்பானவர், கௌரவமாக கருத்துக்களை முன்வைப்பவர். நல்ல பேச்சாளரும் கூட. இ.தொ.க தலைமை தமது சுய நலனுக்காக யாரோ ஒருவரை வைத்து, அறிக்கை எழுதி, இத்தகைய மூத்த தலைவர்களின் பெயரிலே அதனை வெளியிட்டு, அவர்களுக்கு தலை குனிவை ஏற்படுத்துகின்றனர். இன்றைய தலைமைகளின் முதிர்ச்சியற்ற இந்த நிலையே, இந்நிலைமையை ஏற்படுத்துகின்றது.
மக்களால் நிராகரித்து ஓரம் கட்டப்பட்ட, இ.தொ.க தலைவருக்கோ, ஊழல் வாதிகளுக்கோ, மக்களால் என்றும் அபிமானத்துடன் தெரிவுசெய்யப்படும் எங்களை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை என்பதை ஞாபகப்படுத்துகின்றேன். இ.தொ.க வின் பல மூத்த தலைவர்கள் ஆரோக்கியமாக ஓரமாகிவிட்டார்கள். எஞ்சி இருப்பவர்களும் தங்களுடைய நட்பெயர்களை காப்பாற்றிக்கொள்ள முடிவுகளை எடுப்பது சிறந்தது.” -எனவும் வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.










