இந்தியாவுக்கு இன்று வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா – ரஷ்யாவின் 23-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை டெல்லி வருகிறார்.
அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், அதிபர் புதினுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதிபர் புதின் வருகையை ஒட்டி, டெல்லி போலீஸ் உயரதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள், துப்பாக்கிச் சுடும் வீரர்கள், ட்ரோன்கள், ஜாமர்கள் உட்பட பல்வேறு அம்சங்களுடன் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, புதினின் பாதுகாப்புக்கு ரஷ்ய கமாண்டோக்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே டெல்லி வந்துள்ளனர். அவர்கள் ட்ரோன் உதவியுடன் புதின் செல்லும் பாதைகள், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களை அலசி ஆராய்ந்து வருகின்றனர். இவை அனைத்தையும் 24 மணி நேரமும் கண்காணிக்க டெல்லியில் புதிதாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பமும் அதிபர் புதின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது. முகத்தை அடையாளம் காணும் அதிநவீன கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதின் இந்தியா வந்திறங்கியதும் டெல்லி போலீஸார் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் வெளிப்புற பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். ரஷ்ய கமாண்டோக்கள் புதினை சுற்றிப் பாதுகாப்பாக இருப்பார்கள். பிரதமர் மோடி – அதிபர் புதின் இருவரும் சந்தித்து ஒன்றாக வரும்போது, ரஷ்ய மற்றும் இந்திய கமாண்டோக்கள் உள்புற வளையத்துக்குள் பாதுகாப்பு பொறுப்பை ஏற்க உள்ளனர்.
இந்தியா வரும் அதிபர் புதின், தன்னுடன் அதிநவீன ‘ஆரஸ் செனட்’ என்ற லிமோ சின் காரை மாஸ்கோவில் இருந்து கொண்டு வருகிறார். இந்த கார் மிக பாதுகாப்பானது. இந்த கார் ‘சக்கரங்களில் மீதுள்ள கோட்டை’ என்று புகழப்படுகிறது. சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, இந்த லிமோசின் காரில்தான் பிரதமர் மோடியை அதிபர் புதின் அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.










