” அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கையை கொழும்பு மற்றும் முழு மலையகத்திலும் முன்னெடுக்கவுள்ளேன். அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற. ” – என்று ஜக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலவாக்கலை காரியாலயத்தை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அமரர் தலைவர் சந்திரசேகரின் வழியில் நான், அரசியல் பணிகளில் ஈடுபட்டுவந்தபோது மலையக மக்கள் முன்னணியில் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அந்த அமைப்பில் அரசியல்துறை தலைவர் என்ற பதவியினை மறைந்த தலைவர் சந்திரசேகரன், ஏற்படுத்தி கொடுத்தார்.
அந்த அமைப்பில் நான் தற்போது இல்லாவிட்டாலும்கூட பதுளை மாவட்டத்தில் நிலையானதொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தலவாக்கலை நரில் முதல் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது.
ஜக்கிய மக்கள் முன்னணி, ஜக்கிய தொழிலாளர் முன்னணி என்ற வகையில் இந்த காரியாலயம் இயங்கும்.
கடந்த காலத்தைவிட தற்போது கல்வித்துறையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எமது ஜனாதிபதி கல்வி துறைக்கு முக்கியத்துவம் வழங்கிவருகின்றார். எனவே, பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாகுறையினை நிவர்த்திசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறோம்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுவருகின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றன. எதிர்வரும் காலங்களில் இந்த கூட்டு ஒப்பந்தம் முறை புதுப்பிக்கப்படுகின்ற நிலையில் இருக்கிறது.” – என்றார்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்
