நுவரெலியாவில் ஹட்டன் நோக்கி நேற்று மாலை பயணித்த இபோச பேருந்தினை நானுஓயா கிளாரண்டன் பகுதியில் வழிமறித்த, மேலதிக வகுப்பிற்கு செல்லும் மாணவ குழுவினர், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தாக்குதல் நடாத்திய இருவர் நானுஓயா பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
“ மேலதிக வகுப்புக்கு செல்லும் ஒரு சில மாணவர்கள் நுவரெலியாவில் இருந்து நானுஓயா கிளாரண்டன் நோக்கி குறித்த பேருந்தில் வந்ததாகவும் இதன் போது நடத்துனருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக தொலைபேசி அழைப்பின் மூலம் ஏனைய நண்பர்களுக்கு தெரிவித்து குறித்த பேருந்தினை கிளாரண்டன் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் வழிமறித்து இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதி மற்றும் நடத்துனர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் படி 15 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றினைந்து தாக்குதல் நடத்தியதாகவும் , பேருந்தும் தாக்கப்பட்டு சேதப்படுத்தபட்டதாகவும் , பேருந்தில் நடத்துனர் கையில் இருந்த டிக்கெட் வழங்கும் மின்னணு கருவியையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தாக்குதல் நடாத்திய இருவர் மாணவர்கள் நானஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் தலைமறைவாகியுள்ளனர் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இ.போ.சபை சொந்தமான பேருந்தினை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்துள்ளனர்.
இதன்காரணமாக நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.










